பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்


பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா  10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
x
தினத்தந்தி 31 Aug 2023 12:30 AM IST (Updated: 31 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கற்பக விநாயகர்

திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற குடவரை கோவிலாக கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் விழாவில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் புகழ்பெற்றதாகும். ஆண்டுதோறும் இங்கு விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா வருகிற 10-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை கொடியேற்றம் நிகழ்ச்சியும், இரவு உற்சவர் கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

2-ம் நாளன்று இரவு சிம்ம வாகனத்திலும், 3-ம் நாளன்று பூத வாகனத்திலும், 4-வது நாள் கமல வாகனத்திலும், 5-வது நாள் இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 6-ம் நாளான வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் நாளன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாள் இரவு வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

9-ம்நாள் மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 10-ம் நாளான விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

விழா நடைபெறும் அனைத்து நாட்களின் இரவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.


Next Story