டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் ஒத்திகை திட்டம்


டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் ஒத்திகை திட்டம்
x

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் ஒத்திகை திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு மது பிரியர்களிடம் இருந்து கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் காலி மது பாட்டில்களை மது பிரியர்கள் மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து, ரூ.10-ஐ திரும்ப பெற்று செல்கின்றனர்.

ஒத்திகை திட்டம்

நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை பெரிய மாவட்டமான கோவையிலும், சிறிய மாவட்டமான பெரம்பலூரிலும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 37 டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் ஒத்திகை திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது.

கூடுதலாக ரூ.10 வசூலிப்பு

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைக்கு முன்பு மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க குவிந்தனர். டாஸ்மாக் கடையின் முன் காலி மது பாட்டிகளை திரும்ப பெறும் ஒத்திகை திட்டம் குறித்து மது பிரியர்களின் பார்வையில் படும்படியாக சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. சரியாக மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்தவுடன் மது பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்க கையில் பணத்துடன் நின்றனர்.

அப்போது மது பிரியர்களிடம், டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்கள் மது பாட்டில்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும், மது குடித்து விட்டு காலி பாட்டிலை மீண்டும் அதே கடையில் கொடுத்தால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10 திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டில்களில் ஓட்டப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் விற்பனையாளர்கள் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலித்தனர்.

வாக்குவாதம்

மது பிரியர்களில் சிலர் கூடுதலாக எவ்வளவு வசூலித்தாலும் பரவாயில்லை. மது பாட்டில்களை சீக்கிரம் கொடுங்கள் என்று வாங்கி சென்றனர். இந்த திட்டம் குறித்து தெரியாத பெரும்பாலான மது பிரியர்கள் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது குறித்து விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு விற்பனையாளர்கள் திட்டம் குறித்து விளக்கம் அளித்ததால் வாக்குவாதத்தை கைவிட்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

பெரும்பாலான மது பிரியர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டிலை, டாஸ்மாக் கடையில் கொடுத்து ரூ.10-ஐ திரும்ப பெற்று சென்றனர். சிலர் காலி தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து வந்து, அதில் மதுவை ஊற்றி விட்டு காலி மது பாட்டிலை திரும்ப ஒப்படைத்து ரூ.10-ஐ பெற்று சென்றதை காணமுடிந்தது. டாஸ்மாக் பணியாளர்கள் காலி மது பாட்டில்களில் ஸ்டிக்கர் உள்ளதா? என்று பார்த்து வாங்கி மது பிரியர்களுக்கு ரூ.10-ஐ திரும்ப கொடுத்தனர்.

மது பிரியர்கள்-பணியாளர்கள் கருத்து

இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில், ஏற்கனவே டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தால் மேலும் கூடுதலாக ரூ.10 கொடுத்து, திரும்ப பெற வேண்டியுள்ளது. இது ஒரு வேளைக்கு 2 வேளையாக உள்ளது. நிறைய பேர் வீட்டிற்கு வாங்கி சென்று மது குடிப்பார்கள். அவர்களுக்கு ரூ.10 நஷ்டம் தான் ஏற்படும். இந்த திட்டம் மலைப்பகுதிகளில் மட்டும் செயல்படுத்தினால் போதுமானது. மேலும் இதனால் காலி மது பாட்டில்களை சேகரிப்போரின் பிழைப்பு பாதிக்கப்படுகிறது. டாஸ்மாக் பணியாளர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படும், என்றனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், மது பிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் மோதலை உருவாக்கும் இத்திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இந்த திட்டம் பணியாளர்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கும். இருக்கின்ற மோசமான பணி சூழலில் இந்த திட்டம் அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும், என்றனர்.


Next Story