பவானி ஆற்றில் குளித்த போது பரிதாபம் கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்


பவானி ஆற்றில் குளித்த போது பரிதாபம்  கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்  கதி என்ன? தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளித்த போது கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கல்லூரி மாணவர்கள்

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் (வயது 24) என்பவர் எம்.பி.ஏ. படித்து வந்தார். இதேபோல் அதே கல்லூரியில் கோவையை சேர்ந்த சுரேந்தர் (23), சூலூர் பகுதியை சேர்ந்த ராஜதுரை (22), சேலம் பகுதியைச் சேர்ந்த ரோஷன் (22), நெய்வேலியை சேர்ந்த கோகுல் (20), புதுக்கோட்டையை சேர்ந்த ஆதன் (22), சென்னையை சேர்ந்த சூர்யா (22), மதுரையை சேர்ந்த விஜய் (22), காரமடையை சேர்ந்த சாணக்கியா (22), தஞ்சாவூரை சேர்ந்த நிதிஷ் (22) ஆகியோர் எம்.பி.ஏ. படித்து வந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகினர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் கனிஷ்க் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேரும் கோவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் அருகே நரிப்பள்ளம் ரோடு மாம்பட்டியில் உள்ள தங்களது நண்பர் ஒருவரின் தோட்டத்திற்கு சென்றனர்.

திடீர் வெள்ளப்பெருக்கு

தோட்டம் அருகே பவானி ஆறு செல்கிறது. ஆற்றைக் கண்டதும் அவர்களுக்கு ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் 10 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றில் குளித்து கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கல்லூரி மாணவர்கள் ரோஷன், கோகுல், ஆதன், சூர்யா, விஜய், சாணக்யா, நித்திஷ் ஆகியோர் தத்தளித்தபடி ஆற்றின் மறுகரைக்கு சென்று உயிர் தப்பினார்கள்.

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்

ஆனால் ஆற்றின் நடுவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த கனிஷ்க், சுரேந்தர், ராஜதுரை ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றின் கரையோரப் பகுதியில் இருந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர். தங்கள் கண் முன்னே நண்பர்கள் 3 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், மேட்டுப்பாளையம் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தேடும் பணி தீவிரம்

தீயணைப்பு படை வீரர்கள் பரிசல்காரர்கள் உதவியுடன் பாதாள சங்கலியை ஆற்றில் வீசி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள் 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மறு கரையில் சிக்கி தவித்த 7 பேரையும் பரிசல்காரர்கள் உதவியுடன் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு இக்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரம் பெய்த மழை காரணமாக தேடும் பணி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் தேடும் நடந்தது. மேலும் இரவு வெகுநேரமாகிவிட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று (திங்கட்கிழமை) மாணவர்களை தேடும் பணி மீண்டும் தொடங்கும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

பவானி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த மாணவர்கள் 3 பேர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும ஏற்படுத்தி உள்ளது.



Next Story