'ஈரோட்டில் பிரமாண்ட நூலகம் கட்ட திட்டம்' அமைச்சர் முத்துசாமி தகவல்


ஈரோட்டில் பிரமாண்ட நூலகம் கட்ட திட்டம் அமைச்சர் முத்துசாமி தகவல்
x

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 127 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் சு.முத்துசாமி, ‘ஈரோட்டில் பிரமாண்ட நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது’ என கூறினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 127 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் சு.முத்துசாமி, 'ஈரோட்டில் பிரமாண்ட நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது' என கூறினார்.

இலவச சைக்கிள்

தமிழக அரசின் கல்வித்துறை மூலம் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் 127 பள்ளிக்கூடங்களில் படித்துவரும் 13 ஆயிரத்து 140 மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தில் சைக்கிள்கள் பெற உள்ளனர். இதற்காக வட்டார அளவில் சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளன.

மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நேற்று ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டர் டாக்டர் மனீஷ் தலைமை தாங்கினார்.

அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

விழாவில் தமிழக வீட்டுவசதித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புதிய இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டி, திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு இலவச பஸ் பயண வசதி உள்ளது. மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

அரசு பள்ளிக்கூடங்களில் பிளஸ்-2 வரை படித்து, கல்லூரிகளில் உயர் படிப்புக்கு செல்ல பொருளாதார வசதி இல்லாத மாணவ-மாணவிகளுக்காக புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். உதவித்தொகை திட்டத்தில் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இதுபோல் தற்போது சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது.

ஈரோட்டில் நூலகம்

ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, சென்னை, மதுரையில் கட்டப்பட்டு உள்ள பிரமாண்ட நூலகங்கள் போன்று ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் பிரமாண்ட நூலகம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. ஐ.ஏ.எஸ். அகாடமியும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறும்போது, ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய திட்டங்கள் தொடங்க முதல்-அமைச்சர் அனுமதி அளித்ததன் பெயரில் 2 புதிய பஸ் நிலையங்கள் வர உள்ளன. ஈரோட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா தொடங்க 9½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.

நேற்று ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 195 பேர், கலைமகள் கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 361 பேர், கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் பள்ளி மாணவிகள் 222 பேர், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 162 பேர், காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 72 பேர் என 1,012 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.



Related Tags :
Next Story