1,000 மலர் நாற்றுகள் நடவு
கோத்தகிரி நேரு பூங்காவில் 1,000 மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
கோத்தகிரி
கோத்தகிரி நேரு பூங்காவில் 1,000 மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
நேரு பூங்கா
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. அதேபோல் நடப்பாண்டில் கடந்த மாதம் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பிரமாண்ட காய்கறி சிற்பங்கள் மற்றும் செல்பி ஸ்பாட்டுகள் அமைக்கப்பட்டன.
2 நாட்கள் நடந்த காய்கறி கண்காட்சியை 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் கடந்த 12-ந் தேதி திறக்கப்பட்டது. கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் கோத்தகிரி நேரு பூங்காவிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
மலர் நாற்றுகள்
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டாலும், வார இறுதி நாட்களில் நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இன்னும் அகற்றப்படாமல் உள்ள கழுகு வடிவ செல்பி ஸ்பாட்டில் நின்று ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
பூங்காவில் காய்ந்து மற்றும் அழுகிப்போன மலர் செடிகள் அகற்றப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக மீண்டும் 1,000 மலர் நாற்றுகள் புதிதாக நடவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் புல் தரைகளில் வளர்ந்து உள்ள கூடுதலான புற்கள் எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றப்பட்டு, சமன்படுத்தி புல் தரைகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் பூங்கா பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.