சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோர்ட்டு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்-மாவட்ட நீதிபதி பங்கேற்பு
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோர்ட்டு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அகற்றப்பட்டன.
ஊட்டி
சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோர்ட்டு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அகற்றப்பட்டன.
உலக சுற்றுச்சூழல் தினம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசநிலை கருதி, ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி காக்கா தோப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் பின்புறம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இதில் வக்கீல்கள் கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.
இதன் பின்னர் நீதிபதி அப்துல் காதர் கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நட்டார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:-
இந்த உலகம் உதித்த காலத்தில் இருந்து இங்கு ஒவ்வொரு உயிரினமும் வாழ முக்கியம் இந்த பூமியின் சுற்றுச்சூழல் தான். இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள், மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது.
உலகின் பல பகுதிகளில் நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. அதேவேளையில் பிளாஸ்டிக், ரசாயன கழிவுகள், குப்பைக் கழிவுகள் யாவும் இன்னும் ஆற்றிலும், கடலிலும் கலந்து அப்பகுதிகளை மாசு படுத்தி அங்கு வாழும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை கொல்லுகின்றது.
சுற்றுசூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கு அவசியமானது ஆகும்.
இயற்கை வாழிடங்களை பாதுகாக்க வேண்டும்
இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும். உலக நாடுகள் அனைத்தும் இயற்கையான வாழிடங்களை பாதுகாத்து, அவற்றை மென்மேலும் சீரழிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, நிலத்திலும், கடலிலும் உள்ள சீரழிந்த சூழலமைப்புகளை சரி செய்யும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் லிங்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகன கிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர் தமிழினியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக யானைகளுக்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவ சேவை செய்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய புத்தகம் அங்கிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் பல்வேறு பள்ளி கல்லூரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினத்தை வெட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.