திருப்பூரில் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம்
திருப்பூரில் ஆடல், பாடல் என ஆரவாரத்தை வெளிப்படுத்தி திருப்பூரில் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்பட்டது.
திருப்பூர்
திருப்பூரில் ஆடல், பாடல் என ஆரவாரத்தை வெளிப்படுத்தி திருப்பூரில் மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாடப்பட்டது.
மகிழ்ச்சியான ஞாயிறு
திருப்பூர் மாநகராட்சி சார்பில் மகிழ்ச்சியான ஞாயிறு 3-வது மண்டலம், 35-வது வார்டு கே.பி.என்.காலனி, ஸ்ரீசக்தி தியேட்டர் சாலையில் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். காலை 6 மணி முதலே குடும்பத்துடன் பெண்கள், இளைஞர்கள் படையெடுக்க தொடங்கினார்கள். இதற்காக சக்தி தியேட்டர் சாலை மற்றும் கே.பி.என்.காலனி என 2 மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. முதலில் பரதநாட்டியம், பாடல், சிலம்பம் உள்ளிட்ட தமிழ் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது மக்கள் கைகளை அசைத்தும், குரல் எழுப்பியும், நடனமாடியும் ஆரவாரம் செய்தனர்.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க சக்தி தியேட்டர் சாலை முதல் கே.பி.என்.காலனி வரை இளைஞர்களும், இளம்பெண்களும் குழுவாக சேர்ந்து குத்தாட்டம் போட்டு குதூகலத்தில் ஈடுபட்டனர். செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேலும் ராட்சத பலூன், கேரம் உள்பட 30-க்கும் மேற்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். கும்மியாட்டம், வள்ளியாட்டம், சலங்கையாட்டம், சிலம்பம் ஆகியவை பொதுமக்களை கவர்வதாக அமைந்திருந்தது. கே.பி.என். காலனி பகுதியில் தேசத்தலைவர்களின் படங்கள் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான பள்ளி மாணவர்கள் வரைந்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் தொடங்க விடப்பட்டிருந்தது. ஆங்காங்கே பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர், தின்பண்டங்கள், உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.