பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது:விழுப்புரம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 504 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்


பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது:விழுப்புரம் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 504 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:46 PM GMT)

பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வை 21 ஆயிரத்து 504 மாணவ- மாணவிகள் எழுதினார்கள்.

விழுப்புரம்

பிளஸ்-1 பொதுத்தேர்வு

பிளஸ்-1 மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் தமிழ் தேர்வுடன் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களிலும் என 101 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வை எழுத 121 அரசு பள்ளிகள், 16 அரசு உதவி பெறும் பள்ளிகள், 56 தனியார் பள்ளிகள் என 193 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 735 மாணவர்களும், 11 ஆயிரத்து 342 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 77 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர்.

21,504 பேர் தேர்வு எழுதினர்

முதல்நாளான நேற்று தமிழ் தேர்வை எழுதுவதற்காக காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வந்திருந்தனர். தொடர்ந்து 10 மணிக்கு அவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது.

இத்தேர்வை 10 ஆயிரத்து 395 மாணவர்களும், 11 ஆயிரத்து 109 மாணவிகளும் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 504 மாணவ- மாணவிகள் எழுதினர். 340 மாணவர்களும், 233 மாணவிகளும் என 573 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பறக்கும் படையினர் கண்காணிப்பு

தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள் என 2,599 பேரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் அடங்கிய 115 பறக்கும் படை குழுவினரும் ஈடுபட்டனர். இதுதவிர தேர்வுப்பணியை கண்காணிக்கும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா தலைமையிலும் பறக்கும் படையினர் கண்காணித்தனர். பொதுத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story