விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
வால்பாறை அருகே விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
வால்பாறை
வால்பாறை அருகே சோலையாறு நகரில் உள்ள வலது கரையை சேர்ந்தவர் ஜீவன் ராஜா(வயது 16). இவர் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் ஜீவன் ராஜா சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி அவரை சோலையாறு நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் சேர்த்தனர்.
ஆனால் அந்த பள்ளிக்கு செல்ல மாட்டேன், பழைய பள்ளிக்குதான் செல்வேன் என்று ஜீவன் ராஜா கூறி வந்தார். மேலும் புதிய பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை பெற்றோர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜீவன் ராஜா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.