பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு

ஈரோட்டில், பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி

ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு சூர்யா என்ற மகனும், முத்துலட்சுமி (வயது 16) என்ற மகளும் இருந்தனர். முத்துலட்சுமி கைக்குழந்தையாக இருக்கும் போதே அவருடைய தாய் இறந்து விட்டார். இதற்கிடையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தந்தையும் இறந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து முத்துலட்சுமியின் அத்தை சாந்தி அவரையும், அவரது அண்ணன் சூர்யாவையும் வளர்த்து வந்தார். முத்துலட்சுமி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார். கடந்த மாதம் 27-ந்தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை.

மன வேதனை

இதன்காரணமாக கடந்த சில நாட்களாக முத்துலட்சுமி மிகுந்த மன வேதனையில் இருந்தார். இதனால் முத்துலட்சுமிக்கு அவருடைய அத்தை சாந்தி ஆறுதல் கூறி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சாந்தியும், முத்துலட்சுமியின் அண்ணன் சூர்யாவும் வெளியே சென்று விட்டனர். இதனால் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பின்னர் சாந்தி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனால் சாந்தி கதவை தட்டினார். ஆனால் முத்துலட்சுமியிடம் இருந்து பதில் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அப்போது முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறையில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முத்துலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளஸ்-1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது முதல் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே தோல்வி அடைந்த மாணவ -மாணவிகளுக்கு அரசு சார்பில் தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story