கற்கள் ஏற்றி சென்ற வேன் மோதி பிளஸ்- 1 மாணவன் சாவு
கற்கள் ஏற்றி சென்ற வேன் மோதி பிளஸ்- 1 மாணவன் சாவு
துடியலூர்
கோவை அருகே கற்கள் ஏற்றி சென்ற வேன் மோதி பள்ளி மாணவன் சாவு பரிதாபமாக இறந்தான். அந்த வேன், லாரியில் மோதி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேன் டிரைவர்
கோவை கே.என்.ஜி.புதூரில் இருந்து ஹாலோபிளாக் கற்கள் ஏற்றிக்கொண்டு டெம்போ வேன் ஒன்று மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை நோக்கி நேற்றுகாலை சென்று கொண்டு இருந்தது. அந்த வேனை சூர்யா என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் 2 வடமாநில தொழிலாளர்களும் இருந்தனர். அந்த வேன், நரசிம்மநாயக்கபாளையம் ஜோதிகாலனி அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
ரோட்டில் கவிழ்ந்தது
இதில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் 50 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். ஆனால் அதன்பிறகும் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி ரோட்டோரத்தில் நின்ற லாரி மீது மோதுவது போல் சென்றது. இதனால் டிரைவர் வேனை திருப்ப முயன்ற போது ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் ஏறியது. இதனால் அந்த வேன் திடீரென்று சாலையில் கவிழ்ந்தது. இதன் காரணமாக அந்த வேனில் இருந்த ஹாலோபிளாக் கற்கள் அனைத்தும் ரோட்டில் கொட்டியது. அதில் சில கற்கள், வேனில் சிக்கியவர் மீதும் விழுந்தது.
மாணவன் சாவு
வேன் ரோட்டில் கவிழ்ந்ததில் டிரைவர் சூர்யா மற்றும் 2 வட மாநில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 108 அம்புலன்ஸ் வந்தது. அதில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சாய்பாபாகாலனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்து படுகாயம் அடைந்தவர் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் மாரியம் மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வடிவேலுவின் மகன் பிரவின் (வயது16) என்பதும், அவன் அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. இதற்கிடையே மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி பிரவின் பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதன்பிறகு சாலையில் கிடந்த ஹாலோபிளாக் கற்கள் அப்புறப் படுத்தப்பட்டன. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.