உடுமலை கோட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 3,879 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்


உடுமலை கோட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 3,879 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
x

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உடுமலை கோட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 3,879 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

திருப்பூர்

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உடுமலை கோட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 3,879 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

போலீசார் பாதுகாப்பு

அரசு பொதுத்தேர்வான பிளஸ்-2 தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதற்காக உடுமலை கோட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் 18 பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதே மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகள் 3,877 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நடைபெறும் மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் பார்வையிட்டு பள்ளியின் சுற்றுப்புறத் தூய்மை, கழிப்பறை வசதி, தேர்வு அறைகளில் போதிய வெளிச்சம், குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வினாத்தாள் கட்டுக்கோப்பு மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர கண்காணிப்புக்கேமராக்கள் பொருத்தி கண்காணிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து தேர்வு மையங்களும் தயாராக உள்ளதா? என்பதை கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

பறக்கும் படை

நிலையான பறக்கும் படை, கல்வித்துறை அதிகாரிகள் பறக்கும் படை என தேர்வினை ஆய்வு செய்ய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 தேர்வறைகள் உள்ள தேர்வு மையத்திற்கு ஒரு பறக்கும் படை அலுவலரும், 10-க்கு மேல் தேர்வறைகள் உள்ள இடத்திற்கு 2 பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர உயர் அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி போன்றோர் தலைமையில் 6 சிறப்பு பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வறை கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு அரசின் தேர்வு நடைமுறைகள் குறித்து விளக்கினர். இந்த பொதுத்தேர்வில் தேவைப்படும் தேர்வு மையங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கான ஆசிரியர்களும் தயார் நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் முழுமையான பாடத்திட்டத்தில் தேர்வு எழுதத் தயாராகி உள்ளனர். முதல் கட்டமாக இன்று மொழிப்பாடத்துக்கான தேர்வு எழுத உள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மூலம் தேர்வுக்கான வழிகாட்டல்கள் மற்றும் உளவியல் ரீதியாக உற்சாகப்படுத்தப்பட்ட மாணவர்கள் இன்று உற்சாகமாக தேர்வுகளை எழுத உள்ளனர்.


Related Tags :
Next Story