அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் கலெக்டர் மோகன் அறிவுரை


அரசு பொதுத்தேர்வில்  தேர்ச்சி பெறாத மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்  கலெக்டர் மோகன் அறிவுரை
x

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்


பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மோகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 2 முதல் 4 சதவீதம் வரை அதிகரித்துக்கொண்டே வருவதன் மூலம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

மாணவர்களுக்கு அறிவுரை

நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவில் தோல்வியடைந்த மாணவ- மாணவிகள் யாரும் தவறான எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். ஒரு சில மாணவ- மாணவிகளின் தவறான முடிவு மிகவும் அதிர்ச்சியளிப்பதுடன் வருத்தத்தையும் அளிக்கிறது.

வெற்றி, தோல்வி என்பது நிலையான ஒன்றல்ல. தற்போது தோல்வியை பெற்றால் உடனடியாக தேர்வு எழுதி வெற்றி பெற்று விடலாம். உயிர் என்பது விலைமதிக்க முடியாத ஒன்று. தங்களை இந்தளவிற்கு உருவாக்கிட பெற்றோர்கள், எந்தளவிற்கு சிரமப்பட்டிருப்பார்கள். ஒரு நொடியில் எடுக்கும் தவறான முடிவால் அந்த குடும்பம் எந்தளவிற்கு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

எனவே இதுபோன்ற தவறான முடிவுகளை எந்த மாணவ- மாணவிகளும் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது. தற்போது மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் அடுத்து நடைபெறும் தேர்வில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து எந்தவித தவறுகளையும் செய்ய வேண்டாம். பெற்றோர்கள், இதுபோன்ற நேரங்களில் பிள்ளைகளிடம் கனிவாக பேசி இந்த முறை இல்லை என்றால், அடுத்தமுறை தேர்வு எழுதி மதிப்பெண் பெற்றுக்கொள்ளலாம் என்று அன்பு காட்டி பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கல்வி மாவட்ட அலுவலர்கள் திண்டிவனம் கிருஷ்ணன், செஞ்சி கலைவாணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் செந்தில்குமார், பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள் கோகுலகண்ணன், வெங்கடேசபெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story