நீலகிரியில் 34 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு


நீலகிரியில் 34 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு
x

கோப்புப்படம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே 34 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றில் 7,440 மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினார். குறிப்பாக இந்த தேர்வை கண்காணிக்க துறை அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள், பறக்கும் படை என 761 ஆசிரியர்கள் தேர்வுத்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் மார்ச் 27-ம் தேதி நடைபெற்ற கணித தேர்வில் மாணவ மாணவியர்களுக்கு ஒரு சில ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நீலகிரி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பாற்றி சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தேர்வில் மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.

இதையடுத்து கண்காணிப்பாளர் உட்பட 5 பேரை மாவட்ட கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளில் நீலகிரி மாவட்டத்தில் 93.85% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வில் ஆசிரியர்கள் உதவி செய்ததாக கூறப்பட்ட அறை எண் 3 மற்றும் 4-ல் தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் தேர்வு விடைத்தாள்கள் சென்னை கல்வி தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Next Story