பாலக்கோடு அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவி சாவு; நீச்சல் பழகிய போது பரிதாபம்
பாலக்கோடு
பாலக்கோடு அருகே கிணற்றில் நீச்சல் பழகிய போது பிளஸ்-2 மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
பிளஸ்-2 மாணவி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகள் கலையரசி (வயது16). இவர் மாரண்டஅள்ளி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவி நேற்று மகேந்திரமங்கலம் அருகே கருக்கனஅள்ளியில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்றார். அங்கு நீச்சல் பழகுவதற்காக அதேபகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் மனோகரன் என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்றார்.
கிணற்றில் நீச்சல் பழகிய போது மாணவி கலையரசி திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் சென்ற சிறுமிகள் மேலே வந்து சத்தம் போட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவியை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.
உடல் மீட்பு
இதுகுறித்து பாலக்கோடு போலீசுக்கும், மாணவியின் குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் நீச்சல் பழகிய போது தண்ணீரில் மூழ்கி பிளஸ்-2 மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.