கத்தியால் குத்தியதில் பிளஸ்-2 மாணவர் சாவு: கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


கத்தியால் குத்தியதில் பிளஸ்-2 மாணவர் சாவு: கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x

ஸ்ரீமுஷ்ணம் அருகே பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்தி கொலை செய்தவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

பிளஸ்-2 மாணவர் கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் ஜீவா(வயது 17). இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கும், நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் என்ஜினீயர் ஆனந்த்(22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜீவா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பெலாந்துறை வாய்க்கால் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜீவாவை குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்த தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலை செய்த ஆனந்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேல்புளியங்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊர் எல்லையை நெருங்குவதற்கு முன்பாக, திடீரென்று ஜீவாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பெலாந்துறை வாய்க்கால் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் வெற்றிவேல், மண்டல துணை தாசில்தார் சிவகண்டன், சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபிக்ஷா, மதுபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது கொலை செய்த என்ஜினீயர் ஆனந்தை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வாங்கித் தரவேண்டும், ஜீவாவின் தங்கைக்கு கல்வி செலவுக்கு உதவி தொகை வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இதையேற்ற ஜீவாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து ஜீவாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.


Next Story