தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை
x

பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தூக்குப்போட்டார்

திருப்பூர் அங்கேரிபாளைம், போயர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு தயாசங்கர் (வயது20) என்ற மகனும், யோகஸ்ரீ (17). என்ற மகளும் இருந்தனர். வெங்கமேடு வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் யோகஸ்ரீ பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று பெற்றோர் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்ட நிலையில், யோகஸ்ரீ பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார்.

நீண்ட நேரமாக யோகஸ்ரீ வெளியே வராததால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் சரஸ்வதி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது யோகஸ்ரீ வீட்டிற்குள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மாணவி பரிதாப சாவு

வீட்டிற்கு விரைந்து சென்ற பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யோகஸ்ரீயை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். யோகஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் மாணவி யோகஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது.

திருமணமான வாலிபர்

மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு யோகஸ்ரீயின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் கொங்குநகர் சரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் யோகஸ்ரீயையும், அந்த வாலிபரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அந்த வாலிபருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரும், பெற்றோரும் யோகஸ்ரீக்கு அறிவுரை கூறி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் மனஉளைச்சலுக்கான யோகஸ்ரீ நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story