பிரதமர் மோடி பொதுக்கூட்டம்; அதிகாரிகள் ஆலோசனை


பிரதமர் மோடி பொதுக்கூட்டம்; அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 24 Feb 2024 4:50 PM GMT (Updated: 25 Feb 2024 7:26 AM GMT)

மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் பொதுக்கூட்ட மைதானம் கொண்டுவரப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா 27-ந் தேதி நடைபெறுகிறது. இதை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக பா.ஜனதா நடத்துகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்தநிலையில், இன்று பொதுக்கூட்ட மைதானத்தை மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் ஆய்வு செய்தனர்.பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், பொதுக்கூட்ட மைதானம், பார்வையாளர்கள் பகுதி, உணவு கூட பகுதி, வாகனம் நிறுத்தும் பகுதி, ஹெலிகாப்டர் இறங்கும் தளம், மற்றும் அருகில் உள்ள உயரமான கட்டிடங்கள், போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும் அந்தப் பகுதியின் வரைபடம், அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர்கள் சேகரித்தனர். மேலும் இன்று முதல் பொதுக்கூட்டம் மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரையும் தீவிர சோதனைக்குப் பிறகு அனுப்பி வைக்க வேண்டும் என மைதானம் பாதுகாப்பில் உள்ள போலீசாரிடம் அறிவுறுத்தினர்.

பின்னர் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தினர். பொதுக்கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள். எவ்வளவு வாகனங்கள் வரும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்தது.

இதைத்தொடர்ந்து இன்று முதல் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் பொதுக்கூட்ட மைதானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே பல்லடத்தில் இருந்து மாதப்பூர் வரை இரண்டு புறங்களிலும் பாஜக கொடிகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் உணவு வழங்க சுமார் 13 லட்சம் உணவு பொட்டலங்கள் தயார் செய்ய உணவு கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் ,மாவட்ட பொதுச் செயலாளர் கே. சி. எம். பி. சீனிவாசன், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.


Next Story