தமிழக பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு?
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை,
3 நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி, சென்னையில் நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்து விட்டு, சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் இரவு தங்குகிறார். பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 22 ஆயிரம் போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் மோடி இரவு முக்கிய பிரமுகர்களை சந்திக்க நேரம் ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், தமிழகத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் உள்பட பல மாநில நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் பா.ஜனதா செயல்பாடுகள், நாடாளுமன்ற தேர்தல் கள நிலவரங்கள் குறித்த அரசியல் ரீதியிலான கருத்து பகிர்வுகள் இந்த சந்திப்பின்போது இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.