பனை ஓலையில் பிரதமர் மோடியின் உருவப்படம்: பனைத் தொழிலாளியை நேரில் சென்று பாராட்டிய பா.ஜ.க எம்எல்ஏ
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தை பனை ஓலையால் செய்த பனைத் தொழிலாளியை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார்.
ஶ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் பால்பாண்டி. பனை தொழிலாளியான இவர் தற்போது பனை ஓலையில் பல்வேறு பொருட்களை செய்து வருகிறார்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் உருவத்தையும் பனை ஓலையில் செய்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பனைத் தொழிலாளி பால்பாண்டி தனது வீட்டில் பிரதமர் மோடியின் முழு உருவத்தை பனை ஓலையால் செய்துள்ளார். மோடியின் உருவப்படத்திற்கு பனை ஓலையை பயன்படுத்தி பேண்ட் சர்ட் அணிந்து வர்ணம் பூசி தத்ரூபமாக அவரது உருவத்தை வடிவமைத்துள்ளார்.
இதை அறிந்த திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பனை தொழிலாளி பால்பாண்டி வீட்டிற்கு நேரில் வந்து மோடியின் உருவத்தை பார்த்து பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.