பிரதமர் மோடியின் பேச்சு மீனவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது - முத்தரசன் கண்டனம்


பிரதமர் மோடியின் பேச்சு மீனவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது - முத்தரசன் கண்டனம்
x
தினத்தந்தி 16 March 2024 11:10 AM GMT (Updated: 16 March 2024 12:42 PM GMT)

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளார்

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது சென்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களது படகும் மீன்பிடி சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 14 ஆம் தேதி இரவு கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர்ந்து வரும் அத்துமீறலை பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் அகஸ்தீஸ்வரத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காது கிழிய பேசிய மோடியின் வாய்ச் சவடால் மீனவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது. தனது ஆட்சியின் தோல்வியை மறைக்க இந்தியா கூட்டணி மீது பழி சுமத்துகிறது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை கடற்படையின் சட்டவிரோத செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் அரசியல் உறுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை திருப்பி அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story