தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. அரசியல் பயிலரங்கம் திறப்பு: புதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. அரசியல் பயிலரங்கம் திறப்பு:  புதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு  டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x

புதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று திண்டிவனத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று வருகை தந்தார். அங்குள்ள அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றிய அவர், புதுப்பொலிவுடன் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தை திறந்து வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.

விழாவில், டாக்டர் அன்புமணி ராமதாஸ், பேசுகையில், தற்போது உள்ள அரசியல் நடைமுறைகளை கலைந்து புதிய திட்டங்கள், புதிய செயல்பாடுகளை எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் 2.0 திட்டம் ஆகும். இந்த திட்டத்தை சிறிது, சிறிதாக செயல்படுத்த உள்ளோம். பா.ம.க. கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

சுமையாக நினைக்க வேண்டாம்

கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இந்த பயிலரங்கத்தில் பொறுப்பாளர்கள் அனைவரும் பயிற்சி பெற்று கட்சிக்கும், நாட்டுக்கும் சிறப்பு செய்ய வேண்டும். இங்கு அளிக்கப்படும் பயிற்சியை சுமையாக நினைக்க வேண்டாம்.

அரசியல் பக்குவம் பெறுவதற்காகத்தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பொறுப்பாளர்கள் சரியாக செயல்படாவிட்டால் விடுவிக்கப்படுவார்கள். பரிந்துரைத்து யாரும் பதவிகள் பெற்று விடலாம் என நினைக்கக் கூடாது என்றார்.

தண்ணீரை சேமிக்க...

இதைத்தெடர்ந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. எனவே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திட வேண்டும்.

கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.

இதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரை வீணாக கடலில் கலக்க விடாமல் தடுத்து, சேமிக்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரிவினை அடக்குமுறை தவறு

தெடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை மாநகராட்சியில் சாதி பெயர்களை நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்:-சாதி கெட்ட வார்த்தை என்று சிலர் நினைக்கிறார்கள். சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை, சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்டவர்களை அடையாளம் காட்டியது சாதிதான். சாதியை வைத்து பிரிவினை அடக்கு முறையை செய்வது தான் தவறு. சாதியால் பழக்கவழக்கங்கள், திருமணம் போன்ற கலாசாரம் இன்னும் தொடர்கின்றன.

மொழியை திணிக்க கூடாது

கேள்வி:- இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்கிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:-மாநில மொழி முக்கியத்துவம் வாய்ந்தது. மொழிகளில் அலுவல் மொழி, இணைப்பு மொழி என இரு வகைப்படும். நாட்டில் அலுவல் மொழி 22 உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாகும்.

எனவே எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது. அப்படிப் பார்த்தால் தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழியாகும். எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் திணிக்க கூடாது.

புதிய கல்வி கொள்கை என்பது மாநில அரசை சார்ந்தது. எனவே புதிய கல்வி கொள்கையில் மாநில அரசு தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு உரிமை உண்டு.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

நிகழ்ச்சியில் தலைமை நிலைய செயலாளர் இசக்கிபடையாட்சி, தேர்தல் பணிக்குழு தலைவர் ஏ.கே. மூர்த்தி, செயலாளர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பராயலு, பொது செயலாளர் வடிவேல் ராவணன், மாநில சட்ட பாதுகாப்பு குழு செயலாளர் பாலாஜி, மாநில துணை தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத், நகர செயலாளர் ராஜேஷ், முன்னாள் நகர செயலாளர் பால்பாண்டியன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் வானூர் ராஜ்கிரண், கிளியனூர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story