சிறுமியை கடத்தியதாக டிரைவர் மீது போக்சோவில் வழக்கு
சிறுமியை கடத்தியதாக டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
சிறுமியை கடத்தியதாக டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.
அனுமதி பெறுவது கட்டாயம்
திருமணம், காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது. சம்மன் அனுப்பி குற்றவாளி மற்றும் மனுதாரரை விசாரணை செய்யலாம். குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம், காரணத் தை பதிவு செய்ய வேண்டும். குற்றவாளியை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
முக்கிய வழக்குகளின் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டு உள்ளார். இதை தொடர்ந்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் முதல் முறையாக போக்சோ வழக்கில் கைது நடவடிக்கை எடுக்காமல் வழக்குபதிவு மட்டும் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
டிரைவருடன் பழக்கம்
நெகமம் போலீஸ் நிலையத்தில் கடந்த 2-ந்தேதி 17 வயது சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த 7-ந் தேதி வீட்டிற்கு திரும்பி வந்ததாக தெரிகிறது. அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், சிறுமி, ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த போது அங்கு டிரைவராக வேலை பார்த்த 26 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அந்த டிரைவர் அழைத்து சென்று உள்ளார். ஆனால் சிறுமி பெற்றோ ரை பார்க்காமல் இருக்க முடிய வில்லை என்று கதறி அழுததால் திருப்பி அனுப்பியதாக தெரிகிறது.
வழக்குப்பதிவு
இதை தொடர்ந்து அந்த டிரைவர் மற்றும் சிறுமியை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதில், சிறுமி தனது அனுமதியின் பேரில் தான் அழைத்து சென்றதாக கூறியதாக தெரிகிறது. ஆனாலும் சிறுமியை கடத்தி சென்றதாக டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ஆனால் கைது செய்யாமல் விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், வழக்கமான போக்சோ வழக்குகள் போன்று தான் வழக்குபதிவு செய்து கோர்ட்டில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். கைது நடவடிக்கை மட்டும் எடுக்கவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக விசார ணைக்கு அழைக்கும் போது எல்லாம் குற்றம்சாட்டப் பட்டவர் வர வேண்டும். கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறும் என்றனர்.