நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான்


நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான்
x

தலைவாசல் அருகே நாய்கள் துரத்தியதால் ஒரு புள்ளிமான் வீட்டுக்குள் புகுந்தது.

சேலம்

தலைவாசல், மே.20-

தலைவாசல் அருகே நாய்கள் துரத்தியதால் ஒரு புள்ளிமான் வீட்டுக்குள் புகுந்தது.

புள்ளிமான்

தலைவாசல் அருகே லத்துவாடி கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகள் காணப்படுகின்றன. குறிப்பாக மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து ஒரு பெண் புள்ளிமான் நேற்று லத்துவாடி கிராமத்தின் அருகில் வந்துள்ளது. மாலை 5 மணிக்கு நாய்கள் அந்த புள்ளி மானை துரத்தி உள்ளன. இதனால் அந்த மான் லத்துவாடி ஊருக்குள் நுழைந்தது. பின்னர் விவசாயி ராஜேந்திரன் என்பவரது வீட்டுக்குள் புகுந்தது.

வனத்துறையினர் மீட்டனர்

இதைப்பார்த்த ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டு கதவை பூட்டினார். மேலும் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து மானை துரத்தி வந்த நாய்களை விரட்டினார். பின்னர் லத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் கோமதிகுழந்தைவேலுக்கு தகவல் தெரிவித்தார். ஊராட்சி தலைவர் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் வனக்காப்பாளர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் உடனே விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் புகுந்த மானை பத்திரமாக மீட்டனர். பின்னர் மான் மிரண்டு போகாமல் இருக்க அதன் கண்களை துணியால் மூடி ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றினர். தொடர்ந்து வீரகனூர்அருகே உள்ள பொன்னாலி அம்மன் கோவில் வனப்பகுதியில் புள்ளிமானை விட்டனர். உடனே மான் துள்ளிக்குதித்து வனப்பகுதிக்குள் ஓடியது.


Next Story