ஜேடர்பாளையம் அருகேஇளம்பெண் கொலை வழக்கில் குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் நித்யா (வயது 28) பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி அரசியல் கட்சியினர், பல்வேறு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து நித்யாவின் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கொலை வழக்கை விசாரிக்க நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீசார் நித்யா கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பிரபாவின் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரப்பாளையத்தில் உள்ள நித்யாவின் வீட்டுக்கு சென்று அவருடைய கணவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.