பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி


பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி
x

நாகர்கோவிலில் பட்டா கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர். நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. அந்த சமயத்தில் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கல்வீச்சு- இன்ஸ்பெக்டர் காயம்

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். முதலில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்து பஸ்சில் ஏற்றியபோது சிலர் ஏற மறுத்து சாலையிலேயே அமர்ந்திருந்தனர். உடனே மகளிர் போலீசார் குண்டு கட்டாக அவர்களை தூக்கிச் சென்றனர்.

மேலும் மறியலில் ஈடுபட்ட ஆண்களை பிடித்து ஒரு மினிபஸ்சில் ஏற்றிய போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் சாலையில் கிடந்த கற்களை எடுத்து மினிபஸ் மீதும், போலீசார் மீதும் வீசினர். இதில் மினிபஸ்சின் முன், இடதுபக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. மேலும் கல் வீச்சில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டு ஜோஸ் உள்பட 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பதற்றம் உருவானது.

போலீசார் தடியடி

நிலைமை எல்லை மீறி போனதால் அதனை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசாரின் தடியடியில் குமார், கிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. கல்வீச்சில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் விசாரணைக்காக பிடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story