பிஷப் பங்களா முன்பு போலீஸ் குவிப்பு
பாளையங்கோட்டையில் பிஷப் பங்களா முன்பு போலீஸ் குவிக்கப்பட்டது.
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டல நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பணி நியமனம், பணியிட மாறுதல், தாளாளர்கள் மாற்றம் ஆகியவை தொடர்பாக பிஷப் பர்னபாஸ் எடுக்கும் நடவடிக்கைக்கு லே செயலாளர் ஜெயசிங் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக திருமண்டல அலுவலகம் பூட்டிக் கிடப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே திருமண்டல அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் சபை மக்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருமண்டல ஊழியர்கள் அலுவலகத்தை திறப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது அவர்களை போலீசார் வெளியேற்றினார்கள்.
இந்தநிலையில் பிஷப் தனது இல்லத்தில் அலுவலகம் திறந்து இருப்பதாகவும், சேகரத்தலைவர்கள் அந்தந்த சேகர பணத்தை பிஷப் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் கொண்டு வந்து செலுத்த வேண்டும் என்றும் அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிஷப் பங்களா முன்பு சிலர் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் பரவியது. இதையொட்டி நேற்று அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.