போலீஸ் தம்பதி, வனவர் வீட்டில் 27 பவுன் நகைகள் திருட்டு


போலீஸ் தம்பதி, வனவர் வீட்டில் 27 பவுன் நகைகள் திருட்டு
x

பெரம்பலூரில் போலீஸ் தம்பதி, வனவர் வீட்டில் 27 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

போலீஸ் தம்பதி

பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் அழகுவேல் (வயது 38). இவரது மனைவி சுகுணாவும் முதல் நிலை போலீஸ்காரராக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.

அழகுவேலும், சுகுணாவும் வீட்டில் கடந்த 15-ந்தேதி கடைசியாக பீரோவில் வைத்திருந்த 12¾ பவுன் நகைகளை பார்த்துள்ளனர். நேற்று மதியம் அழகுவேல் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, ஒதியத்தூருக்கு செல்வதற்காக மனைவியுடன் புறப்பட்டார். அப்போது நகைகள் அணிந்து செல்லலாம் என்று எண்ணிய சுகுணா நகைகளை எடுக்க பீரோவை திறந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த நகைகளை காணவில்லை.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 2 பேரும் தாங்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடி சென்றிருக்கலாம், என்று சந்தேகிக்கின்றனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.

இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வனவர் வீட்டிலும் திருட்டு

பெரம்பலூர் சமூக வனசரகத்தில் வனவராக பணிபுரிந்து வருபவர் சக்திவேல் (32). இவர் தனது மனைவி பவித்ரா மற்றும் 3 வயது பெண் குழந்தையுடன் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே முத்துலட்சுமி நகர், 3-வது குறுக்கு தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி காலை 10 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, தனது குடும்பத்துடன் சொந்த ஊரான குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி அருகே உள்ள காடூருக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து நேற்று மாலை பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு சக்திவேல் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 14½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சக்திவேல் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

ஒரே கும்பலை சேர்ந்தவர்களா?

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் அதே பகுதியில் 5-வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டில் நகை-பணம் திருட்டு போயிருந்தது. எனவே 2 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சென்ற மர்ம ஆசாமிகள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம்? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்தப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் தம்பதி, வனவர் வீட்டில் 27 பவுன் நகைகள் திருட்டு போன சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story