போலீஸ் காவல் முடிந்து 5 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்
போலீஸ் காவல் முடிந்து 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 8-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினா். முதல் கட்டமாக மேற்கண்ட 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத் மேற்கண்ட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பேரிடமும் ராமநாதபுரம் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினா். இதில் பல முக்கிய ரகசிய தகவல்களை 5 பேரிடமிருந்து பெற்றதாக கூறப்படுகிறது. பரமக்குடியில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். விசாரணை முடிவடைந்த நிலையில் அவர்கள் 5 பேரையும் நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்ட மகிளா கோட்டில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மேற்கண்ட 5 பேருக்கும் வருகிற 31-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.