விஜய் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு


விஜய் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
x

புதுக்கோட்டையில் லியோ பட ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினா் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் ஒரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சியில் இருந்து காரில் புதுக்கோட்டைக்கு வந்தார். அவரை புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மண்டபம் வரை ஊர்வலமாக அழைத்து செல்வதற்காக ரசிகர்கள் மோட்டார் சைக்கிளில் குவிந்தனர்.

ஆனால் அவர்களை வாகனங்களில் ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி தர மறுத்தனர். நகரின் வழியாக மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் எனவும், 4 அல்லது 5 நபர்கள் பிரிந்து செல்லும்படியும் போலீசார் கூறினர். அதன்பின் ரசிகர்கள் மோட்டார் சைக்கிளில் தனித்தனியாக சென்றனர். இதனை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா?

புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுடன் காரில் சிப்காட் அருகே இருந்து அரசு மருத்துவக்கல்லூரி செல்லும் சாலை வழியாக புதுக்கோட்டை நகருக்கு வந்தார். மண்டபத்தில் மாவட்ட தலைவர் பர்வேஸ் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பேசுகையில், லியோ படம் மாபெரும் வெற்றி பெறும் என்றார். அவரிடம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுமா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் பதில் எதுவும் தெரிவிக்காமல், கையெடுத்து கும்பிட்டு, புன்னகைத்தப்படி புறப்பட்டு சென்றார். பத்திரிகையாளர்களின் எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story