'போலீஸ் நண்பர்' வெட்டிக்கொலை
திருச்சுழி அருகே வயற்காட்டில் ‘போலீஸ் நண்பர்’ ெவட்டிக் கொலை செய்யப்பட்டார். அதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே வயற்காட்டில் 'போலீஸ் நண்பர்' ெவட்டிக் கொலை செய்யப்பட்டார். அதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
'போலீஸ் நண்பர்'
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர், மணிகண்டன் (வயது 37). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகின்றன.
இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே ஊரில் தனித்தனியாக வசித்தனர். மணிகண்டன், தன் தாயாருடன் வசித்து வந்தார்.
இவர் அப்பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து (இன்பார்மர்), போலீஸ் நண்பராக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
இதனால் அவருக்கும், அந்த கிராமத்தில் வேறு சிலருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வயலுக்கு மணிகண்டன் சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ஒரு கும்பல், அவரை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள், மணிகண்டன் படுகொலை செய்யப்பட்டு கிடந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்து, பரளச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். முன்பகை காரணமாக மணிகண்டன் ெகாலை செய்யப்பட்டாரா? போலீஸ் நண்பனாக அவர் தகவல் அளித்து வந்ததில் ஏற்பட்ட பிரச்சினையா அல்லது வேறு எதுவும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.