சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு


சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிப்பு
x

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்பெக்டர், பா.ஜ.க. பிரமுகர் உள்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ கோர்ட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகாரில், 'என்னை எனது உறவினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார்.

அடையாளம் காட்டக்கூடிய நபர்கள் என்னை அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொழில் செய்ய வற்புறுத்துகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், தேசிய கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரும் சேர்ந்து என்னை அடிக்கடி பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்துகிறார்கள். என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி விசாரணை நடத்தினார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுமியை பராமரித்து வந்த அவரது உறவினரே சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அவரது உறவினருக்கு நன்கு அறிமுகமான பலர் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு அந்த சிறுமியை இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பலருக்கு விருந்தாக்கிய அதிர்ச்சி தகவல்களும் விசாரணையில் தெரியவந்தது.

சிறுமி தனது புகாரில் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதை உறுதி செய்த போலீசார், சிறுமியின் உறவினர் மற்றும் சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையைச் சேர்ந்த தொழில் அதிபரான பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 44), சென்னை எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த புகழேந்தி (45) உள்பட 22 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்ளிட்ட 22 பேர் மீதும் கடந்த 5.2.2021 அன்று சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் மற்றும் கைதானவர்களின் வாக்குமூலம், சாட்சியங்களின் வாக்குமூலம் என 600 பக்கங்களை கொண்டதாக இந்த குற்றப்பத்திரிகை இருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் 16.2.2021 அன்று தொடங்கி தொடர்ச்சியாக நடந்து வந்தது. மொத்தம் 96 பேர் சாட்சியம் அளித்தனர்.

வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட மாரீஸ்வரன் என்பவர் இறந்து போனார். இதைத்தொடர்ந்து மற்ற 21 பேர் மீது விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன், காமேஸ்ராவ் (33), முகமது அசாருதீன் (33), பசுலுதீன் (32), வினோபாஜி (39), கிரிதரன் (36), ராஜசுந்தரம் (62), நாகராஜ் (30), பொன்ராஜ் (35), வெங்கட்ராம் என்ற அஜய் (25), கண்ணன் (53) உள்பட 21 பேரும்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், 21 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இவர்களில் 7 பேர் பெண்கள் ஆவார்.

இவர்களுக்கான தண்டனை விவரம் 19-ந் தேதி(இன்று) அறிவிக்கப்படும் என்றும், அன்றைய தினம் அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.Police inspector, 20 others convicted in POCSO case


Next Story