20 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை
கனியாமூர் கலவரத்தின் போது பள்ளி தாளாளர் வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது தொடர்பாக 20 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
கள்ளக்குறிச்சி
கனியாமூர் கலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதை அடுத்து அவரது சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் கலவரமாக வெடித்தது.
இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனங்களை தீவைத்து எரித்தனர். மேலும் பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து 275 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் கலவர கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை
இதையடுத்து மாணவியின் மர்ம சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் மாணவியின் மர்மசாவு தொடர்பாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் கலவரம் நடந்த அன்று கைப்பற்றப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களின் ஆதரத்தின் அடிப்படையில் இதுவரை 413 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 13 பேர் மீது குண்டர் தடப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
இந்த நிலையில் மாணவி மர்ம சாவு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார் கனியாமூர் கலவரத்தின் போது தனது வீட்டில் புகுந்து 275 பவுன் நகைகள், ரூ.30 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் இ்ந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உறுதி செய்யவில்லை
இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கூறும்போது, கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது பள்ளி தாளாளர் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக கண்காணிப்பு கேமரா மூலம் சிக்கியவர்கள், கலவரத்தில் கலந்து கொண்டவர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற கும்பல் யார் என்பது இன்னும் உறுதி செய்யவில்லை என தெரிவித்தனர்.