நடிகை தற்கொலை வழக்கில் தயாரிப்பாளரிடம் போலீசார் விசாரணை
சென்னை விருகம்பாக்கத்தில் நடிகை தற்கொலை செய்த வழக்கில் அவரது காதலரான சினிமா தயாரிப்பாளரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 'வாய்தா' பட நடிகை பவுலின் ஜெசிகா (வயது 29) நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
"நான் ஒருவரை காதலித்து வந்தேன். அந்த காதல் கைகூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை" என உருக்கமான கடிதமும் எழுதி வைத்து இருந்தார்.
இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடிகை பவுலின் ஜெசிகாவின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசி உள்ளார்? என்பது குறித்து விசாரித்தனர். அதில் அவர், கடைசியாக சிராஜூதீன் என்பவரிடம் அதிக நேரம் செல்போனில் பேசியது தெரியவந்தது.
காதலனிடம் விசாரணை
பவுலின் ஜெசிகா, சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக நடிகை தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சிராஜூதீனிடம் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
ஆனால் தற்போது சிராஜூதீன் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் போலீஸ் விசாரணைக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) போலீஸ் நிலையம் வருவதாக தெரிவித்துள்ளார். நடிகை தற்கொலைக்கான முழு காரணம் என்ன? நடிகை தற்கொலை செய்து கொள்ள சிராஜூதீன் தூண்டினாரா? அவரது தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது சிராஜூதீனிடம் விசாரித்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
நடிகையின் பிரேத பரிசோதனை முதல்கட்ட அறிக்கையில், பவுலின் ஜெசிகா உடலில் வேறு எந்த காயங்களும் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டுதான் இறந்திருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்டதற்கு முதல் நாள், நடிகை பவுலின் ஜெசிகா ஆட்டோவில் வந்து இறங்கி, தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில் மிகுந்த சோர்வுடன் நடந்து செல்வது போன்ற காட்சிகளும், அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு அவரது நண்பர் பிரபாகரன் மிகுந்த பதற்றத்துடன் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில் ஓடி வருவது போன்றும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகளை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
உடல் ஒப்படைப்பு
நடிகை பவுலின் ஜெசிகாவின் காதலன் மட்டுமல்லாது அவரது தோழிகள், சினிமா துறையில் உள்ள நண்பர்கள், அவரது பெற்றோர், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு நடிகை பவுலின் ஜெசிகாவின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தங்களது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதிக்கு கொண்டு சென்று நடிகை பவுலின் ஜெசிகாவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர்.
இன்று முதல் நடிகை தற்கொலை வழக்கில் தங்கள் முழு விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.