ஜேடர்பாளையம் அருகே டிராக்டருக்கு தீ வைப்பு;5 பேரிடம் போலீசார் விசாரணை
ஜேடர்பாளையம் அருகே டிராக்டருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்
தொடரும் சம்பவங்கள்
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வெல்ல ஆலையில் வேலை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களின் கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் குளத்தில் விஷத்தை கலந்தது என அடுத்தடுத்த வன்முறை சம்பவங்கள் நடந்தன.
மேலும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த அறையை உடைத்த மர்மநபர்கள் தொழிலாளர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இதில் ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் ஏராளமான போலீசார் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி இரவு ஜேடர்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 42) என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (70) என்பவரது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகள், அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி (42) என்பவருடைய வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஜேடர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.