சேலம் அருகே வாலிபரிடம் ரூ.11¾ லட்சம் அபேஸ்-சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலம் அருகே வாலிபரிடம் ரூ.11¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரிசு
சேலம் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் சிலம்பரசனின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில் இருந்த லிங்கை பயன்படுத்தி, கேள்விகளுக்கு பதில் அளித்தார். சரியாக பதில் அளித்ததால் அவருக்கு பரிசாக பணம் கிடைத்தது. இதேபோல் சிலம்பரசன் தொடர்ந்து வாட்ஸ் அப்பில் வரும் லிங்கை ஓபன் செய்து பதில் அளித்தார்.
இதற்கிடையில் அடுத்த சுற்றுக்கான லிங்கை அனுப்பவதற்காக சிலம்பரசனிடம் பணம் கேட்கப்பட்டது.
ரூ.11¾ லட்சம் மோசடி
அதை உண்மை என நம்பிய அவர் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த வங்கி கணக்கு எண்ணுக்கு பல தவணையாக ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் அனுப்பினார். அதன் பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு எந்த ஒரு லிங்கும் வரவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிலம்பரசன், இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மோசடி குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.