சங்ககிரி அருகே விபத்தில் 6 பேர் பலி:கைதான லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை
சங்ககிரி
சங்ககிரி அருகே சின்னாகவுண்டனூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக நிறுத்திஇருந்த லாரியின் பின்புறம் அந்த வழியாக வந்த ஆம்னி கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா என ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சங்ககிரி போலீசார், விபத்து ஏற்பட காரணமாக சாலையோரம் லாரியை நிறுத்தி இருந்த டிரைவரை தேடி வந்தனர். பின்னர் அந்த லாரி டிரைவரை கோவையில் போலீசார் நேற்று முன்தினம் மடக்கி பிடித்தனர். பிடிபட்ட அவர், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தேவாரப்பள்ளி தாலுகா சின்னா கவுண்டா கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜெகன்பாபு (வயது 25) என தெரியவந்தது. அவர் மீது சங்ககிரி போலீசார் 279, 337, 304(ஏ) ஆகிய இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.