சேலம் கோர்ட்டுக்கு வந்த 2 போலி வக்கீல்கள்போலீசார் விசாரணை
சேலம் கோர்ட்டுக்கு வந்த 2 போலி வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலம் கோர்ட்டுக்கு வந்த 2 போலி வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகம் எழுந்தது
சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் நேற்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. இதையடுத்து வக்கீல்கள் அவரவர் வழக்கிற்காக மனுதாரர்களிடம் விவரம் கேட்டு கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட ஒரு கும்பல் வக்கீல் உடை அணிந்து கோர்ட்டு வளாகத்தில் சுற்றி வந்ததை வக்கீல்கள் சிலர் பார்த்தனர்.
அப்போது அவர்கள் உண்மையான வக்கீலா? என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்களிடம் வக்கீல்கள் விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து 4 பேர் நைசாக அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து ஒரு பெண் உள்பட 2 பேரை, பிடித்து சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமியிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை
இது குறித்து முத்துசாமியிடம் கேட்ட போது, வக்கீல்கள் உடை அணிந்த 2 பேரை வக்கீல்கள் சிலர் அழைத்து வந்தனர். அவர்களிடம் விவரம் கேட்ட போது வக்கீல் பயிற்சிக்கு வந்து உள்ளோம் என்று மாறி, மாறி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் போலி வக்கீல்களாக இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரையும் அஸ்தம்பட்டி போலீசில் ஒப்படைத்து உள்ளோம் என்று கூறினார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.