செஞ்சி அருகே மயக்கப்பொடி தூவி தொழிலாளியிடம் நகை பறிப்பு 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
செஞ்சி அருகே மயக்கப்பொடி தூவி தொழிலாளியிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தன் மகன் முருகன்(வயது 45), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள பொன்பத்தி கிராமத்தில் தனது நண்பரை பார்ப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். சக்கராபுரம் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் முருகனிடம் நைசாக பேச்சுக்கொடுத்தனர்.
அப்போது அவர்கள் திடீரென முருகனின் முகத்தில் மயக்கப்பொடியை தூவினர். இதில் அவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். அப்போது அவர்கள் முருகன் கையில் அணிந்திருந்த 2¾ பவுன் நகைகளை அவர்கள் பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
வலைவீச்சு
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து முருகன் எழுந்து பார்த்தபோது, அவர் அணிந்திருந்த நகை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகைகளை பறித்து சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.