மயிலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.6½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மயிலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலம்
மயிலம் அடுத்த ஐவேலி கிராமத்தை சேர்ந்தவர் சாரங்கபாணி (வயது 68), விவசாயி. இவர் கடந்த நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்கள், பத்திரங்கள் ஆகியவற்றை காணவில்லை.
நகை-பணம் கொள்ளை
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.6½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து தடயவியல் நிபுணர் சோமசுந்தரம் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.






