அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Aug 2023 4:45 PM IST (Updated: 21 Aug 2023 6:17 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டிற்கு போதிய பாதுகாப்பை காவல் துறை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார்.

சென்னை,

மதுரையில் அதிமுக மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு 20.03.2023 அன்று மதுரையில், நம் இருபெரும் இதய தெய்வங்களின் நல்லாசியோடு, இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் இமயம் தொட்டு குமரி வரையில், இதுபோல் பேரெழுச்சி இதுவரை கண்டதுண்டா என அரசியல் வரலாற்று ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் பெரும்வெற்றி அடைந்திருக்கிறது என்பதை, கழகப் பொதுச் செயலாளர் என்கின்ற முறையில் நான் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்தில், தொன்றுதொட்டு வந்த, அஞ்சாத நெஞ்சுறுதியோடு களம் வந்து நின்ற லட்சோப லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது காலத்தில், எப்படி அலை அலையாய் தொண்டர்கள் கூடி கொள்கை முழக்கமிடுவார்களோ, அதைப் போலவே எனது அன்பான அழைப்பினை ஏற்று கடல் அலை போல், அலை அலையாக ஆர்ப்பரித்து வந்து கலந்துகொண்ட கழகத் தொண்டர்கள் கூட்டம் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், நம்முடைய ராணுவ கட்டுக்கோப்பையும் விசுவாசத்தையும் காட்டி இருக்கிறது; தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் பெரும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும், தமிழ் நாட்டு மக்களின் துயர் விரைவில் தீரும் என்ற அறைகூவலை நம் மாநாட்டின் வெற்றி உறுதிப்படுத்தி இருக்கிறது.

அண்ணாவின் உருவத்தைத் தாங்கி நிற்கும் நம் கழகக் கொடி எம்.ஜி.ஆர் கண்ட கொடி, ஜெயலலிதா இமயம் வரை வென்ற கொடி, மதுரை மண்ணில் லட்சோப லட்சம் தொண்டர்களின் மத்தியில் அசைந்தாடிய காட்சிகள், ஒவ்வொரு தொண்டரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தது. ஜெயலலிதா கூறியது போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் பல நூறு ஆண்டு காலம் மக்களுக்காகவே தொடர்ந்து பணியாற்றும் என்கின்ற உறுதியை பறைசாற்றி இருக்கிறது.

கழகத்தின் மூன்றாம் தலைமுறை எழுச்சியைக் கண்டு நடுங்கிப் போயிருக்கிற தீய சக்திகளின் கூட்டம், காவல் துறையை வைத்து, கழக மாநாட்டில் தொண்டர்கள் கலந்துகொள்வதைத் தடுக்கும் வகையில் பல்வேறு துயரங்களைத் தந்தது. பல இடங்களில் தொண்டர்கள் வந்த வாகனங்களை 30 கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தி, திசை திருப்பி அட்டூழியம் செய்தனர்; "கட்டற்றுப் பாய்கிற காவிரி வெள்ளத்தை சிட்டுக் குருவிகள் கூடி தடுக்கவா முடியும்".

கழக மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்கள், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலால் ஆங்காங்கே காத்திருந்தும், 30 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்தும், மகளிர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக நடந்தே வந்து மாநாட்டில் கலந்துகொண்டதைக் கண்டு எதிரிகள் நடுங்கிப்போய் இருக்கின்றனர்.

விடியா திமுக அரசின் காவல் துறையான ஏவல் துறை, கழக மாநாட்டிற்கு போதுமான பாதுகாப்பை வழங்கவில்லை. மாறாக, மாநாட்டிற்கு வருபவர்களை தடுக்கும் நோக்கத்தில் காவல் துறையினர் பல்வேறு இடையூறுகளை செய்தனர். அதேபோல், துரோகிகளும் சதி வேலைகளில் ஈடுபட்டனர். இவை அனைத்தையும் தாண்டி, கழகத் தொண்டர்கள் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டது நமக்கு கிடைத்திட்ட மாபெரும் வெற்றி. இந்த வரலாற்று வெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலுக்கான வெற்றிக்கும்; அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன" என்று தெரிவித்துள்ளார்.


Next Story