குற்றவாளியை அடையாளம் காணாத போலீஸ்: பாலியல் அத்துமீறல் வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு


குற்றவாளியை அடையாளம் காணாத போலீஸ்:  பாலியல் அத்துமீறல் வழக்கு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
x

நடைபயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மர்ம நபர், பாலியல் அத்துமீறல் செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக அண்ணாநகர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார்.

சென்னை,

குற்றவாளியை சரியாக அடையாளம் காணாமல் வழக்கை விசாரிக்க அனுமதித்தால், குறுக்கு விசாரணை என்ற பெயரில், பாதிக்கப்பட்ட பெண் தர்மசங்கடத்தை அனுபவிப்பார் என்பதால், பட்டப்பகலில் நடந்த பாலியல் வழக்கையே ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் இளம் பெண் ஒருவர் காலை 9.15 மணிக்கு நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பாலியல் அத்துமீறல் செய்து விட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து, அந்த பெண் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அத்துடன் தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபரின் படம், வீடியோ காட்சியையும் போலீசில் ஒப்படைத்தார். ஆனால், போலீசாரால் அந்த மர்ம நபரை உடனடியாக கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் வேறு ஒரு வழக்கில் கைதான ஒருவர், அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த பாலியல் அத்துமீறல் வழக்கில் அவரை குற்றவாளியாக்கி, போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து சாட்சியம் அளிக்க வரும்படி எழும்பூர் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. இதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்டு 11-ந்தேதி சாட்சியம் அளிக்க அந்த பெண் சென்றார். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை காத்திருந்தும் எந்த பயனும் இல்லை.

கோர்ட்டில் காத்திருந்தபோது, தனக்கு நடந்த பாலியல் கொடூர சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதனால், தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கையும், கோர்ட்டு சம்மனையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கு ஆவணங்களை பார்க்கும்போது, குற்றவாளியையும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் சரியாக போலீசார் அடையாளம் காணவில்லை. வேறு ஒரு வழக்கில் கைதான ஒருவரை அவர் அளித்த வாக்குமூலத்தின்படி கைது செய்துள்ளனர். 2 பேரை கண் கண்ட சாட்சிகளாக போலீசார் சேர்த்து இருந்தாலும், அவர்கள் நடந்த சம்பவத்தைத்தான் சாட்சியம் அளிப்பார்களே தவிர, குற்றவாளியை அடையாளம் காட்ட வாய்ப்பு இல்லை.

பட்டப்பகலில் பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்த நபரை போலீசாரால் முறையாக அடையாளம் காண முடியாதது துரதிருஷ்டவசமானது.

இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கை நடத்தி சாட்சியம் அளிக்கச் சென்றால், குறுக்கு விசாரணை என்ற பெயரில் தர்மசங்கடமாக கேள்விகளை கேட்டு, அவரை மேலும் மன வேதனைக்கு ஆளாக்குவார்கள்.

இந்த வழக்கை தொடர்ந்து நடத்தினால், பாலியல் அத்துமீறலால் மனுதாரர் அனுபவித்த வேதனையைத் தவிர வேறு எதுவும் நடக்காது. இந்த வழக்கை நடத்துவதால், பெண்மையை கேலிக்கூத்தாக்குவதுடன், மனுதாரருக்குத்தான் தண்டனை வழங்கும் விதமாக அமைந்து விடும்.

இந்த வழக்கு பாலியல் வழக்கில் உண்மையில் நிலை என்ன? என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அதனால்தான் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் பலர் நீதி கேட்டு கோர்ட்டுக்கு வருவது இல்லை.

ஒரு வேளை உரிமை கேட்டு நீதி கேட்டு பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டுக்கு வந்தாலும், இங்குள்ள சிஸ்டம் (நடைமுறை) அவருக்கு நட்பாக இருக்காது. கோர்ட்டில் அந்த பெண்தான் தர்மசங்கட சூழ்நிலைக்கு ஆளாக வேண்டியது வரும்.

குற்றவாளி அடையாளம் காண முடியாததால், குற்றவாளியும் விடுதலையாகி விடுகிறார். எனவே, மனுதாரரின் கவுரவம், மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மனுதாரருக்கு எழும்பூர் கோர்ட்டு அனுப்பிய சம்மனையும், அந்த கோர்ட்டில் நிலுவையில் உள்ள பாலியல் வழக்கையும் ரத்து செய்கிறேன்.

இவ்வாறு அதில் நீதிபதி கூறியுள்ளார்.


Next Story