விவசாயி தவற விட்ட 3½ பவுன் கைசங்கிலியை போலீசார் மீட்பு
சிதம்பரத்தில் வங்கியில் இருந்து மீட்டு சென்றபோது விவசாயி தவற விட்ட 3½ பவுன் கைசங்கிலியை போலீசார் மீட்பு
சிதம்பரம்
சிதம்பரம் உசுப்பூர் சபாநகரை சேர்ந்தவர் திருஞானம்(வயது 56). விவசாயியான இவர் சம்பவத்தன்று மதியம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்த தனது 3½ பவுன் கைசங்கிலியை மீட்டார். பின்னர் அதை தனது சட்டைப்பையில் போட்டபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தது. ஆனால் இதை கவனிக்காமல் வீட்டுக்கு சென்ற திருஞானம் சட்டைப்பையில் கைச்சங்கிலியை பார்த்தபோது காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தொலைந்து போன கைச்சங்கிலியின் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து சிதம்பரம் நகர போலீஸ்நிலையத்தில் திருஞானம்கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் வங்கியின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, வங்கி வாசலில் திஞானத்தின் சட்டைப்பியில் இருந்து தவறி விழுந்த கைசங்கிலியை பெண் ஒருவர் எடுத்து சென்றது தெரியவந்தது. விசாரணையில் அந்த பெண் கொடிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த தர்மதுரை மனைவி தரணி என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கொடிப்பள்ளம் கிராமத்துக்கு விரைந்து சென்று பெண்ணிடம் இருந்த 3½ பவுன் கைசங்கிலியை மீட்டு திருஞானத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.