நள்ளிரவில் கிணற்றில் குதித்த தாய்-மகளை காப்பாற்றிய போலீசார்


நள்ளிரவில் கிணற்றில் குதித்த    தாய்-மகளை காப்பாற்றிய போலீசார்
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 19 March 2023 6:45 PM GMT)

நாகர்கோவிலில் தற்கொலை செய்வதற்காக கிணற்றில் குதித்த தாய் மற்றும் மகளை துணிச்சலுடன் காப்பாற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தற்கொலை செய்வதற்காக கிணற்றில் குதித்த தாய் மற்றும் மகளை துணிச்சலுடன் காப்பாற்றிய போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கிணற்றில் தவித்த பெண்கள்

நாகர்கோவில் பார்வதிபுரம் பஞ்சாண்டவர் கோவில் தெருவில் உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றுக்குள் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 2 பெண்களின் அபய குரல் கேட்டது. 'தங்களை காப்பாற்றுகள்' என தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் அருகே உள்ள ஒரு டீக்கடையில் இருந்தவருக்கு பெண்களின் சத்தம் கேட்டது. உடனே அவர் கிணற்றை எட்டி பார்த்த போது 2 பெண்கள் கிணற்றின் குழாயை பிடித்தபடி பரிதவித்தபடி உயிருக்கு போராடினார். பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீஸ் ஏட்டு மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பாதுகாப்பாக மீட்பு

வெகுநேரமாக 2 பெண்களும் தவித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த போலீசார் உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த கிணற்றில் படிக்கட்டுகள் இல்லை. கம்பிகள் மட்டுமே பிடித்து ஏறும் வகையில் இருந்தது.

எனினும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் துணிச்சலாக கிணற்றுக்குள் குதித்தார். பின்னர் 2 பெண்களையும் தனித்தனியாக கயிறு கட்டி மேலே கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கயிற்றை மேலிருந்து கிணற்றுக்குள் போட்டனர். ஒரு கயிற்றின் முனையை துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் போலீஸ் ஏட்டு மணிகண்டன் ஆகியோர் பிடித்திருந்தனர். மற்றொரு முனையில் பெண்களை தனித்தனியாக கட்டி பத்திரமாக மீட்டனர்.

பின்னர் 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரையும் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகின.

கணவன்-மனைவி பிரச்சினை

அதாவது கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட 2 பெண்களும் தாய் மற்றும் மகள் ஆவர். தாயாருக்கு 45 வயதும், மகளுக்கு 25 வயதும் ஆகிறது. மகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. ஆனால் மகளுக்கும், மகளின் கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவரை விட்டு பிரிந்து அந்த பெண் தாயார் வீட்டில் வசித்து வந்தார். ஏற்கனவே கணவர் திட்டியதாக மகளிர் போலீசில் புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் புகார் தொடர்பாக விசாரணைக்கு சென்றபோது கணவருடன் வந்த சிலர் தாயாரையும், மகளையும் திட்டியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் இருந்த தாயும், மகளும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கிணற்றில் குதித்ததும், அதன்பிறகு மூச்சு திணறியதால் உயிர் பிழைக்க குழாயை பிடித்தபடி சுமார் 1 மணி நேரம் தவித்ததும் தெரியவந்தது.

பாராட்டு

அதைத்தொடர்ந்து 2 பெண்களுக்கும் போலீசார் பல்வேறு அறிவுரைகளை கூறினர். தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்றும் எடுத்துரைத்தனர். இதற்கிடையே தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய தாய்- மகளை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஏட்டு மணிகண்டன் ஆகியோரை சக போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story