மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்கள் தங்கும் ஓட்டல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி செஸ் வீரர்கள் தங்கும் ஓட்டல்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா ஆய்வு மேற்கொண்டார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44-வது வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 2 ஆயிரம் செஸ் வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் போர் பாயிண்ட் நட்சத்திர ஓட்டல் அரங்கில் செஸ் போட்டிகள் தொடங்க உள்ளது.
இதையடுத்து நேற்று முதல் நட்சத்திர ஓட்டல் வளாகம் முழுவதும் முழு போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இன்று வீரர்கள் பஸ்சில் அழைத்து வரப்பட்டு அரங்கினுள் செல்லும் வழி மற்றும் ஓட்டல் வளாகம் முழுவதும் 70 மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் போர் பாயிண்ட் நட்சத்திர ஓட்டல் வளாகம் மற்றும் செஸ் வீரர்கள் தங்கியுள்ள கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகங்களில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
டி.ஐ.ஜி. ஆய்வு
இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. மாமல்லபுரத்தில் சத்தியபிரியா ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள வெளிமாவட்ட போலீசாருக்கு எந்த இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர்களுக்கு தனித்தனியாக பணிகளை ஒதுக்கி அறிவுரை வழங்கினார். அவருடன் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
பிறகு போலீசார் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர்.