கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஒத்திகை


கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
x

கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், உள்ளூர் போலீசாரும் இணைந்து 'சாகர் கவாச்' என்னும் பாதுகாப்பு ஒத்திகையை நேற்றும், இன்றும் (புதன்கிழமை) நடத்துகிறார்கள். கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று காலை 8 மணிக்கு ஒத்திகை நிகழ்ச்சியை தொடங்கினர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று இரவு 7 மணி வரை நடக்கிறது.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் 3 அதி நவீன ரோந்து படகுகளில் 3 குழுக்களாக கடலுக்குள் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இவர்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியான கன்னியாகுமரி, கன்னியாகுமரி-உவரி இடையே உள்ள கடல் பகுதி மற்றும் அரபிக்கடல் பகுதியில் ரோந்து சென்றனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நம்பியார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், குமரி மாவட்டத்தில் உள்ள 42 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், உள்ளூர் போலீசாரும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளிலும் போலீசார் ரோந்து சென்றனர். அத்துடன் கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் படகு சம்பந்தமான ஆவணங்களையும் தங்களின் மீனவர் அடையாள அட்டையும் வைத்துக் கொள்ளுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மீனவர்கள் விழிப்புடன் இருந்து சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் தெரிய வந்தால் 1093 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story