என்எல்சி அதிகாரி தம்பதி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


என்எல்சி அதிகாரி தம்பதி வீட்டில் ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:46 PM GMT)

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி தம்பதி வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி 11-வது வட்டம் காமராஜ் சாலையில் வசித்து வருபவர் ரவிக்குமார்(வயது 52). இவர் என்.எல்.சி. 1-வது சுரங்கத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நிர்மலா, என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த கீதா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறாா்.

கடந்த 1-ந்தேதி ரவிக்குமார் தனது மனைவி நிர்மலாவுடன் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கீதா, ரவிக்குமாா் வீட்டிற்கு வேலை செய்ய வந்துள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து ரவிக்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் பதறியடித்துக்கொண்டு நெய்வேலிக்கு விரைந்து வந்து பார்த்தார்.

ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை

அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 7 பவுன் நகை, 100 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. அதனை யாரோ மர்மநபா்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து ரவிக்குமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

தொடா்ந்து கடலூரில் இருந்து தடயவியல் நிபுணர் ஸ்ரீதர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றார். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

என்.எல்.சி. அதிகாரி தம்பதி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story