ஈரோட்டில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது


ஈரோட்டில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
x

ஈரோட்டில் விபத்து வழக்கில் மோட்டார்சைக்கிளை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த ஆலாம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 42). இவர் கடந்த 7-ந் தேதி வேலை நிமித்தமாக ஒரு மோட்டார்சைக்கிளில் ஈரோடு வந்தார். மேட்டூர் சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற 70 வயது மூதாட்டி ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

அதில் காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்ததுடன், அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். மூதாட்டிக்கு லேசான காயம் என்பதால் ஒரு நாள் சிகிச்சைக்கு பின்னர் அவரும் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் 8-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் என்பவர் தொலைபேசியில் பிரகாசை தொடர்பு கொண்டு விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக நேரில் வரும்படியும் அழைத்தார்.

மேலும், வழக்கில் கைது செய்யப்படும் நிலை வரும். எனவே 2 ஜாமீன்தாரர்கள் மற்றும் ஜாமீன் தொகை ரூ.10 ஆயிரத்துடன் நேரில் வரவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கூறினார். அதன்பேரில் 9-ந் தேதி பிரகாஷ், 2 ஜாமீன்தாரர்கள், ஜாமீன் தொகையுடன் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். காவல்நிலைய நடைமுறைகளுக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை விடுவிக்கவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்ய ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கட்டாயப்படுத்தினார். அதன்பேரில் பிரகாஷ் ரூ.2 ஆயிரம் கொடுத்தார். பின்னர் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை பிரகாஷ் செலுத்தினார்.

ஆனாலும், வாகனம் உரிமையாளரிடம் வழங்கப்படாமல் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கே கொண்டு வரப்பட்டது. மீதி தொகை வழங்கினால்தான் மோட்டார்சைக்கிளை விடுவிக்க முடியும் என்று சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் நேற்று முன்தினம் ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் நேற்று பிரகாஷ் ரூ.5 ஆயிரத்துடன் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு வந்து, சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரிடம் பணத்தை கொடுத்தார்.

அவர் கையில் பெற்றுக்கொண்டதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கையும், களவுமாக பிடித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வாங்கிய பணத்தை உடனடியாக வாயில் போட்டு மென்று மறைக்க முயன்றார்.. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பணத்தை மீட்டு, சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story