2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை

சோப்பு வாங்கியதற்கு பரிசு கூப்பன் மூலம் பரிசு விழுந்ததாக கூறி பணம் பறித்த 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சோப்பு வாங்கினால் பரிசு கூப்பன்
தேனி அருகே தர்மாபுரி கிழக்கு தெருவை சேர்ந்த சுந்தரம் மனைவி ஆரோக்கியமேரி (வயது 30). இவர் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், "கடந்த ஆண்டு ஜூலை 8-ந்தேதி எங்கள் வீட்டுக்கு பாத்திரம் கழுவும் சோப்பு விற்பனை நிறுவனத்தின் பெயரைக் கூறி 2 பேர் வந்தனர். 3 சோப்பு ரூ.10-க்கு வாங்கினால், அதில் பரிசு கூப்பன் இருந்தால் பரிசு தருவதாக கூறினர். அதை நம்பி நான் வாங்கிய சோப்பில், ரூ.5,800-க்கு கூப்பன் இருந்தது. இதையடுத்து அந்த நபர்கள் அந்த கூப்பனுக்கான பொருட்களை ரூ.3,500-க்கு கொடுத்து விட்டு செல்போன் எண்ணை வாங்கிச் சென்றனர்.
சில நாட்களுக்கு பிறகு அந்த நிறுவனத்தில் இருந்து பேசிய நபர்கள், தங்கள் நிறுவன ஆண்டு விழா வைத்ததில் எனக்கு ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்துக்கான டி.வி., தங்க நாணயம், ஸ்கூட்டர் ஆகிய பரிசுகள் விழுந்துள்ளதாகவும், ரூ.18 ஆயிரத்து 500 ஜி.எஸ்.டி. வரியை மட்டும் கட்டினால் பரிசுப் பொருட்களை அனுப்பி வைப்பதாக கூறினர். அதை நம்பி வங்கிக் கணக்கு மூலம் ரூ.17 ஆயிரத்து 500 அனுப்பி வைத்தேன்.
பணம் மோசடி
பின்னர் அந்த நபர்கள் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு 2 தங்க நாணயம் வைத்து அனுப்பியதால் ஓசூர் சோதனை சாவடியில் வாகனத்தை பிடித்து வைத்து இருப்பதாகவும், ரூ.14 ஆயிரத்து 500 கட்டினால் உடனடியாக அனுப்பி வைப்பதாகவும் கூறினர். அதை நம்பி மீண்டும் ரூ.11 ஆயிரத்து 500 அனுப்பினேன். அதன்பிறகு பொருட்கள் எதுவும் அனுப்பாமல் ஏமாற்றி விட்டனர்" என்று கூறியிருந்தார்.
அதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தியபோது, இந்த மோசடியில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலை சேர்ந்த முருகன் (22), கார்த்திகேயன் என்ற கார்த்திக் (27) ஆகிய 2 பேரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அந்த 2 பேரும், இதேபோன்று நெல்லை மாவட்டத்தில் மோசடி செய்து கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
காவலில் விசாரணை
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு லலிதாராணி உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து, தேனி போலீசார் காவலில் எடுத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மோசடி செய்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களை தேனியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் போலீசார் கைது செய்தனர். விசாரணையை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நேற்று மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.






