தளவாட பொருட்களை மீட்க கிராமம் கிராமமாக சென்று போலீசார் தீவிர விசாரணை


தளவாட பொருட்களை மீட்க கிராமம் கிராமமாக சென்று போலீசார் தீவிர விசாரணை
x

கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தின்போது எடுத்து செல்லப்பட்ட தளவாட பொருட்களை மீட்பதற்காக கிராமம் கிராமமாக சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

கலவரம் வெடித்தது

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம சாவு எதிரொலியால் கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

மேலும் அலுவலகம், வகுப்பறைகளில் இருந்த பெஞ்சுகள், மேஜை, மின்விசிறி, கம்ப்யூட்டர், நாற்காலி உள்ளிட்ட தளவாட பொருட்கள் மற்றும் விடுதியில் இருந்த சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றை சிலர் தலையில் சுமந்தும், வாகனங்களில் வைத்தும் கொண்டு சென்றனர்.

போலீஸ் குழு

இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வி பாதிக்காத வகையில் வகுப்புகள் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து வீடியோ பதிவுகள் மூலம் ஆள் அடையாளம் கண்டு கலவரத்தின்போது பள்ளியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட தளவாட பொருட்களை மீட்பதற்காக 18 பேரை கொண்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் சின்னசேலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று பள்ளியில் இருந்து எடுத்து வரப்பட்ட தளவாட பொருட்களை எடுத்துச்சென்றவர்கள் அதை தாமாக முன்வந்து வைத்து விடுமாறு கேட்டுக் கொண்டனர்.

கிராமங்களில் விசாரணை

இதையடுத்து போலீசுக்கு பயந்து சிலர் தாங்கள் எடுத்து வந்த இரும்பு கதவுகள், தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம், சமையல் கியாஸ் சிலிண்டர்கள், பாத்திரங்கள், கியாஸ் அடுப்பு, ஜாக்கி, மின்விசிறி, பெஞ்சு, மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றை கனியாமூர் கும்பகொட்டாய் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆனால் இன்னும் ஏராளமான தளவாட பொருட்கள் வர வேண்டி இருப்பதால் போலீஸ் குழுவினர் வீடியோ பதிவுகளில் உள்ள காட்சிகளை பார்த்து சின்னசேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று தளவாட பொருட்களை எடுத்து சென்றவர்களிடம் விசாரணை நடத்தி அவற்றை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story